குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய சொத்துகள் பற்றி விசாரணை
October 21, 2025 தினகரன்- இடுகை enb
குற்றச் செயல்கள் மூலம் சம்பாதிக்கப்படும் சொத்துகள் தொடர்பில் விசாரிக்க, ‘குற்றச் செயல்களின் வரும்படிகள் விசாரணைப் பிரிவு’ (Proceeds Of Crime Investigation Division) உத்தியோகபூர்வமாக நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு 01- இல் அமைந்துள்ள முந்தைய பொலிஸ் தலைமையக கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பிரிவை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால திறந்து வைத்தார்.
அதன் பணிப்பாளர் நாயகமாக SSP அசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க `குற்றச் செயல்களின் வரும்படிகள் தொடர்பான சட்டமூலம்` அமுலுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பில் அதிகாரம் கொண்ட அதிகாரசபையாக, இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணைக் குழு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
அனைத்து விசாரணை அதிகாரங்களும் பொலிஸ் பரிசோதகர் தரத்திலுள்ள அதிகாரிகளால் மேற்கொள்ள அதிகாரமளிக்கப்பட்டள்ளதோடு, ஏதேனும் குற்றச் செயல்களின் மூலம் பெறப்படும் சொத்துகள் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில், குற்றவியல் வழக்கு விதிமுறைகள் சட்டத்தில் இதுவரை காணப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள், மேலும் விஸ்தரிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்வதற்காக இச்சட்டமூலத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்படும் சொத்துகள் தொடர்பில், இச்சட்டமூலத்தின் சட்டங்களுக்கமைய உடனடி சட்ட நடவடிக்கைகளை இப்புதிய பிரிவு முன்னெடுக்கும்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப்பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு, குற்றச் செயல்களின் வரும்படிகள் விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
