தொல்பொருள் திணைக்கள பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள்
கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அகற்றும் நடவடிக்கை
கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் இடம் என்ற பெயர்ப் பலகைகளை சனிக்கிழமை மாலை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது திணக்கள அதிகாரிகளுக்கும், பிரதேச சபை நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.நிர்வாகிகள் அந்த நிலம் தமது நிர்வாகத்துக்கு உட்பட்டது என வாதாடினர். இறுதியில் பொலிசாரின் தலையீட்டில் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.பொலிசார் அகற்றும் விடியோக்களும் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சட்டம் அனைவருக்கும் சமம். சட்டத்தை கையிலெடுத்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரே சட்டம்
வடக்கு, கிழக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே சட்டம் தான். அதனை எவரும் மீறக்கூடாது. ஏற்கனவே பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
