நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

நிலநடுக்கம்: மக்கள் தற்போது அச்சப்படத் தேவை இல்லை.


05.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என்ற எனது எச்சரிக்கை குறித்து மக்கள் தற்போது அச்சப்படத் தேவை இல்லை. 

( கலாநிதி நா.பிரதீபராஜா-யாழ் பல்கலைக்கழகம் )

மேலதிக விபரம். 

இந்த பதிவு தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை. மாறாக மக்கள் அது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை.

இலங்கையில் 2004ம் ஆண்டுவரை சுனாமி அனர்த்தம் என்றால் என்னவென்றே பல மக்களுக்கு தெரியாது. அது போன்றே புவிநடுக்க நிகழ்வு பற்றியும் எம் மக்களிடையே பெரியளவிலான விழிப்புணர்வு இல்லை.

 

சுனாமி நிகழும் வரை, சுனாமியால் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை என்றே பலரும் கருதியிருந்தனர். ஆனால் 2004 சுனாமி நிகழ்ந்த பின்னரே அதனைப் பற்றி பலர் அறிந்து கொண்டனர். 

அவ்வாறில்லாமல் புவி நடுக்க நிகழ்வுகளுக்கான வாய்ப்புக்களை நாம் கொண்டிருக்கின்றோம் என்னும் விழிப்பும், புவிநடுக்க நிகழ்வின் பௌதிக செயன்முறை, சாத்தியமான பாதிப்புக்கள், மற்றும் பாதிப்புக்களைக் குறைக்கும் வழிமுறைகளை இலங்கையர் அனைவரும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். 

ஏனெனில் இலங்கையிலும் இலங்கையைச் சூழவும் அண்மித்த காலங்களில் பல சிறிய அளவிலான புவிநடுக்க நிகழ்வுகள் அதிகளவு பதிவாகி வருகின்றன. Hearth et.al.( 2022) என்பவர்களின் ஆய்வின் படி 29.08.2020 முதல் 05.12.2020 வரை விக்டோரியா நீர்த்தேக்கத்தினைச் சுற்றி 05 சிறிய அளவிலான நில நடுக்கங்கள் நிகழ்ந்திருப்பதாக கூறுகின்றனர்.

2007 க்கு பின்னர் இலங்கையிலும் இலங்கையைச் சூழவும் ஏற்பட்ட புவி நடுக்க நிகழ்வுகளின் திகதி, புவிநடுக்கபதிவு கருவியில்( Seismograph) பதிவான ரிக்டர் அளவு, அந்த புவிநடுக்க மையம்( Epic Center) போன்ற விபரங்களை இதனுடன் இணைத்துள்ளேன். 

இலங்கை இந்தியக் கவசத்தகட்டில் அமைந்திருந்தாலும் இலங்கைக்கு கீழே பல சிறிய கவசத்தகடுகள் உள்ளன. அவை நாள் தோறும் ஒருங்கல்,விலகல் அமிழல் போன்ற பல செயற்பாடுகளுக்கு உள்ளாகுகின்றன. அவற்றின் விளைவே  இந்த புவி நடுக்க நிகழ்வுகளின் அதிகரிப்பு. 

 மத்திய மலை நாடு:

அது மட்டுமல்லாது மத்திய மலை நாட்டில் போவத்தன்ன, காசல்றீ, ரந்தெனிகல, ரந்தெம்ப, கொத்மலை, லக்சபானா, மேல் கொத்மலை, மொரகாகந்த, பொல்கொல்ல, விக்டோரியா, மஸ்கெலிய, போன்ற நீர்த்தேக்கக்கங்கள் அமைந்துள்ளன. அவற்றுக்கு அண்மித்து ஏற்படும் மிதமான ( ரிக்டர் அளவில் 5.0 க்கு மேலாக) நிலநடுக்கங்கள் கூட இந்த நீர்த்தேக்கங்களைப் பாதிக்கும். இந்த சூழ் நிலையில் என்றோ ஒரு நாள் இலங்கையின் நிலப்பகுதியிலோ அல்லது இலங்கையின் கரையோரப் பகுதியிலோ நிகழும் பெரிய அளவிலான ( 6.0 ரிக்டர் அளவுக்கு மேலான) நில நடுக்கங்கள் இலங்கையை கடுமையாகப் பாதிக்கும். 

இந்த டிட்வா புயலின் பேரனர்த்தத்துடன் எங்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான அனர்த்தங்கள் தொடர்பாகவும் நாங்கள் விழிப்பாக இருந்தால் நாம் எமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கணிசமான அளவு தவிர்க்கலாம். ஜப்பான் போன்ற நாடுகளில் இத்தகைய முறைமையே பின்பற்றப்படுகின்றது. 

இயற்கை அனர்த்தங்களை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் பாதிப்புக்களை நாம் குறைக்கலாம். 

இயற்கை அனர்த்தங்கள் வருவதற்கு முன் மக்களை விழிப்பூட்டத் தவறிவிட்டு  அனர்த்தம் வந்த பின், அமர்ந்திருந்து அது இது என விபரித்து, யாதொரு பயனும் கிடையாது. 

நான் அந்த வகையைச் சார்ந்தவனுமல்ல.  அனர்த்தத்துக்கு முன்னான, மக்களின் விழிப்புணர்வே மிகப்பெரிய அனர்த்த தணிப்பு நடவடிக்கை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். 

இலங்கையின் புவிநடுக்கம் தொடர்பான மேற்காணும் படங்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டன ( கலாநிதி நா.பிரதீபராஜா-யாழ் பல்கலைக்கழகம் ) நன்றி.

🟠 https://doi.org/10.4038/engineer.v53i3.7418 🟠 https://doi.org/10.1117/1.JRS.17.014507 🟠 https://doi.org/10.1186/s40623-025-02250-5

ஒத்தவை: