18.12.2025 வியாழக்கிழமை இரவு 8.00 மணி.
விழிப்பூட்டும் முன்னெச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்கு தென்மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
இதன் நகர்வு வேகம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளது. இதன் நகர்வு வேகம் குறைவென்பதால் அது மழைவீழ்ச்சி நாட்களை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற தன்மையும் நீடிக்கின்றது.
இதன் காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை முதல் (19.12.2025) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1. தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும்;
2. கனமான மழை கிடைத்து மண் முழு ஈரக் கொள்ளளவை எட்டியுள்ளதாலும்;
3. கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தெம்ப போன்ற நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாலும்;
4. மகாவலி, மாதுறு ஓயா, கல்லோயா, போன்ற ஆறுகள் அவற்றின் முழுக்கொள்ளளவோடு பாய்வதாலும்;
5. காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்கு தென்மேற்கு திசையில் நிலை கொண்டிருப்பதனாலும்;
6. இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும், குறிப்பாக இரத்தினபுரிக்கும் மாத்தறைக்கும் இடையிலேயே இரண்டு மில்லிபார் அமுக்க வேறுபாடு உள்ளமையினாலும்;
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
எனவே அன்புக்குரிய மலையக உறவுகள் நிலச்சரிவு தொடர்பில் மிக மிக எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருப்பது அவசியமானதாகும்.
மழை எதிர்வரும் 20.12.2025 அன்று இரவு முதல் படிப்படியாக குறைவடைந்தாலும் நிலச்சரிவு அபாயம் எதிர்வரும் 23.12.2025 வரை நீடிக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
அதேவேளை
1. மகாவலி, மாதுறு ஓயா, கல்லோயா போன்றன அதிக நீரை கொண்டு வருவதாலும்;
2. ஏனைய சிறிய மற்றும் நடுத்தர ஆறுகளின் நீரேந்து பிரதேசங்களான பொலன்னறுவை, கண்டி, போன்ற பிரதேசங்களில் தொடர்ந்து மழை கிடைத்து வருவதாலும்;
3. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும்;
4. கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை கிடைக்கும் என்பதனாலும்;
கிழக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. திருகோணமலை மாவட்டத்திற்கு மழை குறைவாக இருந்தாலும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே கிழக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களும், மகாவலி, கல்லோயா, மாதுறு ஓயா, முந்தெனியாறு, நவகிரி ஆறு போன்றவற்றின் கரையோரப்பகுதிளில் உள்ள மக்களும் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது சிறந்தது.
அதேவேளை நாளை முதல் (19.12.2025- வடக்கின் சில பகுதிகளுக்கு இன்றிலிருந்து) குளிர் அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 27 ஆம் தேதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- நாகமுத்து பிரதீபராஜா
2025.12.18 බ්රහස්පතින්දා රාත්රී 8.00.
1. අඛණ්ඩ වැසි හේතුවෙන්;
නුවරඑළිය, මහනුවර, මාතලේ, බදුල්ල සහ කෑගල්ල දිස්ත්රික්කවල අධික වර්ෂාපතනය සමඟ සම්බන්ධ නායයෑම් ව්යසන ඇතිවීමේ ඉහළ සම්භාවිතාවක් පවතී.එබැවින්, අපගේ ආදරණීය කඳුකර ඥාතීන් නායයෑම් සම්බන්ධයෙන් ඉතා ප්රවේශම් සහ සුපරීක්ෂාකාරී වීම අවශ්ය වේ.
- නාගමුතු ප්රදීපරාජා
