நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

வேள்வி அமைப்பின் மலையக நிவாரணம்


டிட்வா மலையக அனர்த்தம்- அம்பாறை மாவட்டத்தில் உதவி நிவாரணம்.

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவி: 

இந் நிவாரணப் பணியானது அம்பாறை மாவட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் உத்தியோகஸ்தர்கள், நண்பர்கள்,தொண்டர்கள், வேள்விப் பெண்கள் அமைப்பினர், முன்பள்ளி ஆசிரியர்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரது அயாராத பங்களிப்பின் பயனாகும். 

இப்பணியில் வேள்வி பெண்கள் அமைப்பினர், கிராமமட்ட மகளிர் குழுவினரிடம் சேகரித்த `சிறு துளிகள்` பெரும் முக்கியத்தும் உடையவை. மேலும் மிக மிக குறைந்த வருமானம் பெறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிதி உதவி அளப்பரியதாகும். இத்துடன் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வாழும் அனுதாபிகளின் உதவி பேருதவியாகும். 

டிட்வா சூறாவளி நாடு தழுவிய அனர்த்தம் என்ற போதிலும் இது மலையகத்தைப் பாதித்தவிதம் முற்றிலும் வேறானது.மலையகத்தின் கதை பூமி பிழந்த கதையாகும். மலையகமே சாய்ந்து சரிந்த கதையாகும்.மீள் கட்டுமானம் என்பது நீண்ட நெடிய பாரிய பணியாகும்.

ஆதலால் வேள்வியின் மலையகப் பணியானது இந் நிவாரணப் பணியோடு நிறுத்தப்படப் போவதில்லை. எமது மலையகப் பயணம் அம்மக்களோடு தொடர்ந்து பயணிக்கும்.

இந் நிவாரணப் பணியில் தோளோடு தோள் கொடுத்து நின்ற அனைத்து அன்பர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், தோழர்கள், வளமானோர், வணிகர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த அன்பையும் நன்றியும் தெரிவித்து நிற்கின்றோம். மேலும் இவ்வேளையில் நமது தொடர்ந்த பயணத்துக்கு தங்கள் உதவியையையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். 

வேள்வி பெண்கள் அபிவிருத்தி அமைப்பு

Velvi Women Development Organization 


நிவாரணப் பயணம்:

மலையகத்தை நோக்கிய எமது நிவாரணப் பயணம் 23-12-2025 அதிகாலை 4.00 மணியளவில் ஆரம்பித்தது. அன்று காலை நாம் கல்முனையில் இருந்து புறப்பட்டோம். முற்பகல் 11.00 மணியளவில் கண்டிக் காரியாலயத்தைச் சென்றடைந்தோம்.

நமக்காக ஒதுக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம் மண்சரிவு அபாயம் காரணமாக பல பகுதிகளில் சிறிய சிறிய அலகுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் எல்லாப் பகுதிக்கும் செல்வது சாத்தியமற்றதாய் இருந்தது. 

அதனால் நாம் முடிந்த சில பகுதிக்கு செல்வதோடு, மிகுதிப் பகுதிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை கண்டி நிர்வாகத்தினருக்கு கையளித்தோம்.

சாத்தியமான பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து உதவிகளை வழங்கினோம்.

பேரிடரின் அனர்த்தம் நேரில் பார்ப்பதற்கு நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.

அண்மைய பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள், நிலம் கீழே போவதைப் பார்க்க முடிந்தது.

செல்லவேண்டிய இடத்துக்கு வாகனத்தில் செல்ல இயலவில்லை. பொதிகளை நாமே தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.

நாம் ஏற்கெனவே களைத்துப் போய்விட்டோம்.

ஒரு பகுதிக்கு ஓட்டோ மூலம் எடுத்துச் செல்ல வாய்ப்புக் கிட்டியது.

மிகுதியை ஒருவாறு சுமந்து சென்று எமது இலக்கை அடைந்தோம்.

அது ஒரு சிறிய பாடசாலை, ஆரம்பப் பிரிவுப் பாடசாலை, கண்டி நகரில் இருந்து ஆக 28 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுத் தோட்டப் பிரதேசம். தெல்தோட்டை என்பது அதன் அழகான பெயர். இங்குதான் இருக்கின்றது இந்த அப்பகலகா தோட்டம். இப் பாடசாலையின், சுமார் 2500 சதுர அடிப் பகுதிக்குள் 48 குடும்பங்கள்! பெற்றோர் பெண்கள், இளம் பெண்பிள்ளைகள், சிறுவர்கள்,குழந்தைகள் அடங்கலாக 234 பேர். பெண்களின் தனித்துவமான பாதுகாப்பு, பராமரிப்பு, விசேடமாக மாத சுகவீன காலத்தில் பெண்களுக்கு தேவையான ஓய்வு, அதற்கு வேண்டிய சுகாதார பொருட்கள், இதற்கான ஒழுங்கமைப்பு எதுவும் இருக்கவில்லை.

உடமையை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், மன அழுத்தத்தில் வார்த்தையின்றி பிரமை பிடித்தவராக சுவர் ஓரத்தில் ஒதுங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது. 

இளவயதினர் எதிர்காலம் தங்களுக்கு கிடையாது என்கிறார்கள், காரணம் அவர்கள் பிறந்து வளர்ந்த இடம், அபாய பூமியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புதிய இடத்தில் தங்களுடைய வாழ்வாதாரம் எப்படி அமைக்கப்படும் என அச்சப்படுகிறார்கள்.

இவர்களுடைய வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு வேண்டிய  தரவு சேகரிக்கும் பணியே அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. இருந்த போதிலும் தற்காலிகமாக முகாம்களை அமைத்து உணவு மற்றும் சுகாதார சேவைகளை இயன்றவரை வழங்குகின்றது.

மறுபுறம் டித்வா புயலால் தொழில் பாதிப்படைந்த மக்கள், நாடு தழுவிய வகையில், நாட்டின் சனத்தொகையில் சரி பாதிப்பங்கினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களும் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை. ஆனால் இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்தவர்களுடன் இவர்களை ஒப்பீட்டளவில் சமமாக கருத முடியாது. அரசிடமும், சமூக சேவை அமைப்பினரிடமும் நிவாரண தேவைக்காக இரண்டாம் நிலையில் உள்ள தொழில் பாதிக்கப்பட்டவர்கள், வறுமையில் தள்ளப்பட்டவர்கள் இடைத்தங்கல் முகாமில் இருப்பவர்களை புறம்தள்ளி நிவாரணத்திற்கு தங்களை முதன்மைப்படுத்துவது, பற்றாக்குறையான இத் தருணத்தில் பாரிய இழப்பை சந்தித்த முகாங்களில் தஞ்சமடைந்தவர்களுக்கும் சேவை செய்வோருக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இது வருத்தமான விடயமாக மாறியுள்ளது.

பாரிய இழப்பை சுமந்து இடைத்தங்கல் முகாங்களில் உள்ள மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும்,இளம் பெண் பிள்ளைகளுக்கும் உளவளதுணை அவசியமான தேவையாகவுள்ளது. 

அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் பல பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

சிறார்களின் கல்வி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இடைத்தங்கல் முகாமாக பெரும்பாலும் பாடசாலை பயன்படுத்தப்படுவதால் அந்தப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எமது கருத்து

அங்கு பேசிய மக்களின் - பெண்களின் கருத்திற்கமைவாக  இப்பிரதேசம் ( தெல்தோட்டை-அப்பகலகா தோட்டம்), 2016 ஆம் ஆண்டிலேயே சமூக சேவை நிறுவனங்களின்நிலவள ஆய்வு அறிக்கையூடாக அன்றைய அரசுக்கு, சிவப்பு எச்சரிக்கை பகுதியாகவும் எந்த நேரத்திலும் அனர்த்தம் நிகழலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதை அறிய முடிந்தது. 

மலையகத்தில் வேள்வி 

VIDEO

இது அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும்.

அன்றைய மக்கள் தலைவர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு, மக்களைப் பற்றிய கரிசனை,  தன் கடமையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறிய அளவிலாவது இருந்திருந்தால் இன்றைய அவலநிலை கணிசமான அளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.

இதற்கு யார் பொறுப்பு?

எமது நேரடி அனுபவத்தில், கண் கண்ட சாட்சியத்தில் நாம் கருதுவது:

  • இது உடனடி எதிர்காலத்தில் தீர்வு காணக்கூடிய பிரச்சனை இல்லை என்பது மட்டும் உறுதி.
  • இந்தப் பகுதிகளில் இனிமேல் மக்கள் மீளக் குடியமர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • வேள்வியின் தொடர்ந்த பணியின் அவசியத்தை இந்தப் பயணம் நன்கு உணர்த்தியது.

நிவாரணப் பொதிகளை இறக்கி விட்டு, எதிர்காலப் பணியின் சுமையோடு அன்று பிற்பகலே கனத்த மனத்தோடு கல்முனை நோக்கிப் புறப்பட்டோம். மீண்டும் மறு நாள் அதிகாலை வந்தடைந்தோம். எமது பயணத்தில் ஒத்துழைத்த அனைவருக்கும் குறிப்பாக நமது வாகன சாரதிக்கும் எமது மனமார்ந்த நன்றி24-12-2025    

                          நன்றி                              

மேலும் நிழற்படங்கள்/ வீடியோக்களுக்கு:

 மூலம்: சமூக ஊடகம் படங்கள் பதிவுரிமை: வேள்வி

ஒத்தவை: